Friday, 7 June 2013

லாரிகளுக்கு புதிய அலுமினிய டிஸ்க் : டீசல் சிக்கனத்தால் லாபம்

கடந்த சில ஆண்டுகளாக வாகன உதிரிபாக விலை உயர்வு, டீசல் விலை உயர்வு என பல சிக்கல்களை சந்தித்து வந்த போக்குவரத்து தொழிலில், அதிக பாதிப்புகளை கண்டவர்களில் லாரி உரிமையாளர்களும் உண்டு. இப்போது அவர்களுக்கு, வரப்பிரசாதமாக வந்துள்ளது, புதிய அலுமினிய டிஸ்குகள். லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் இந்த டிஸ்குகள், லாரி தொழிலை எப்படி பாதிக்கின்றன.., அதோடு, இவற்றால் என்ன லாபம் என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களை பார்க்கலாம்.
செலவு கூடியதால், நசிவில் லாரி தொழில்:

தமிழகத்திலேயே, நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக அளவு லாரி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களது லாரிகள், தமிழகத்திற்குள் மட்டுமின்றி, பல வட மாநிலங்களுக்கும் சரக்கு போக்குவரத்து பணிகளில் பெரும் பங்களித்து வருகின்றன. மறுபுறம், சிறு, நடுத்தர மற்றும் பெரிய வகை லாரிகளுக்கான முக்கிய உதிரிபாகங்கள், மற்ற டயர் வகை போன்றவற்றின் விலை தவிர, டீசல் விலை, இன்சூரன்ஸ் கட்டணம் என அனைத்தும் உயர்ந்து, செலவுகள் அதிகரித்து வருவதால், அண்மைக்காலமாக லாரி தொழில் கடும் சவால்களைச் சந்தித்து வருவதாக லாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சவால்களுக்கு தீர்வு சொல்லும் விதமாக, தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் பல புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்துள்ளன. அவ்வகையில், குறைந்த செலவில், லாரிகளுக்கு தேவையான, புதிய உதிரிபாக பொருளோடு சந்தைக்கு வந்துள்ளது, அமெரிக்காவைச் சேர்ந்த அல்கோ வீல் தயாரிப்பு நிறுவனம். இது லாரிகளின் சக்கரத்திற்கு புதிய அலுமினிய டிஸ்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடுதல் பாரம் ஏற்ற வாய்ப்பு:
இதுவரை 42 முதல் 48 கிலோ வரை எடை கொண்ட இரும்பு வடிவிலான டிஸ்க்களே லாரிகளுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த புதிய அலுமினிய டிஸ்க்கின் எடை 21 கிலோ மட்டுமே என்பதால், வாகனத்தில் அதிக மைலேஜ் கிடைக்கும் என்றும் ஒரு கருத்துள்ளது. மேலும், இந்த புதிய டிஸ்குகளால் லாரியின் எடை குறைவதோடு, கூடுதல் பாரம் ஏற்ற முடியும் என்கின்றனர் லாரி உரிமையாளர்கள். பழைய இரும்பு டிஸ்குகள் 5500 ரூபாய்க்கு கிடைக்கும் நிலையில், அலுமினிய டிஸ்குகள் 18000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டீசல் சிக்கனத்தால் லாபம் : வாகன ஓட்டிகளுக்கும் வசதி
மேலும், இந்த டிஸ்குகள் இரும்பு டிஸ்குகளை விட உறுதியாகவும், டியூப் இல்லா டயர்களுடனேயே பயன்படுத்தப்படுவதால் கூடுதல் வசதியுடன் இருப்பதாக கூறுகின்றனர் லாரி ஓட்டுநர்கள். டீசல் சிக்கனம், டயர் தேய்மானம் குறைவு, அதிகளவு பாரம் ஏற்றக்கூடிய வாய்ப்பு என பல அனுகூலங்கள் இருப்பதால், நலிவடைந்து வரும் லாரி தொழிலை மீட்டெடுக்க, இந்த வகை புதிய தொழில்நுட்ப பொருள் உதவும் என்பது இந்த தொழிலில் உள்ளவர்களின் நம்பிக்கை.

No comments:

Post a Comment