Sunday, 30 June 2013

விரைவில் வருது சோலார் பெயின்ட் - SOLAR PAINT

விரைவில் வருது சோலார் பெயின்ட் : சுண்ணாம்பு போல சுவரில் அடிக்கலாம் வீட்டுக்கு வீடு மின்உற்பத்தி நடக்கும்

நியூயார்க்-: சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. தரையிலும் சுவரிலும் சோலார் பேனல் பெயின்டை அடித்தால் வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர் மின்உற்பத்தி நடக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். உலகம் முழுவதும் சோலார் மின் உற்பத்தி திட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனல், நீர்மின் திட்டங்களில் மின்உற்பத்தி குறையும் பகுதிகளில் சோலார் மின் உற்பத்தியில் அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. மக்களும் அரசுகளும் இதில் சற்று தயக்கம் காட்டுவதற்கு காரணம்.. சோலார் பேனல்கள் அமைப்பதற்கு ஆகும் அதிகப்படியான செலவு.
வருங்காலத்தில் சோலார் பேனலுக்கு அதிகம் செலவிட அவசியம் இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதுபற்றி அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள பஃபல்லோ பல்கலைக்கழக எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கியாவ்கியாங் கான் கூறியதாவது: ஒளி ஆற்றலை மின்சாரமாக மாற்றும் திறன் பெற்ற சோலார் செல்களின் தொகுப்புதான் சோலார் பேனல் எனப்படுகிறது. 

பொதுவாக பாலி கிரிஸ்டலைன் சிலிகானை கொண்டுதான் இந்த பேனல் உருவாக்கப்படுகிறது. மெலிதான பிலிம் போல பேனலை தயாரிப்பதென்றால் அமார்பஸ் சிலிகான் அல்லது காட்மியம் டெல்யூரைடு பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு வகையுமே அதிக செலவு ஏற்படுத்தக் கூடியவை. குறைந்த செலவிலான சோலார் பேனல்களை உருவாக்கும் முயற்சி உலகம் முழுக்க நடக்கிறது. அந்த வகையில் பிளாஸ்மோனிக் தன்மை கொண்ட ஆர்கானிக் வகை பொருட்களை சோலார் பேனலாக பயன்படுத்தினால் அதிக மின்உற்பத்தி செய்ய முடியும். செலவும் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது திரவ வடிவில் இருப்பதால் பயன்படுத்துவதும் எளிது. திரவ வடிவில் இருக்கும் சோலார் பேனலை சுவர், தரை என எந்த பகுதியிலும் பெயின்ட் போல எளிதில் பூச முடியும். வெளிச்சம் கிடைக்கும் எல்லா இடத்திலும் இந்த பெயின்ட் அடித்தால் மின்உற்பத்தியும் அதிகளவில் நடக்கும். இது மட்டுமின்றி கார்பனை அடிப்படையாக கொண்ட சிறு மூலக்கூறுகள், பாலிமர்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பிலிம் வகை சோலார் பேனல் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இவற்றையும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இவ்வாறு கியாவ்கியாங் கான் கூறினார்.

No comments:

Post a Comment