Sunday, 30 June 2013

அமெரிக்க விஞ்ஞானிகளின் குளோனிங் ஆராய்ச்சி வெற்றி - SHOCKING NEWS

தோல் செல்லில் இருந்து ஸ்டெம்செல் கரு முட்டை உருவாக்கம் : மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் பகீர் முயற்சியா?


போர்ட்லேண்ட்: மனிதனின் தோல் செல்லுடன் பெண்ணின் சினைமுட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானிகள் அபார சாதனை படைத்துள்ளனர். இதன்மூலம் சிக்கலான ஆபரேஷன்களுக்கு தேவையான ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறினர். குளோனிங் முறையில் மனிதனை ஜெராக்ஸ் எடுக்கும் முயற்சியின் முதல்கட்டம் இது என்ற பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது இந்த ஆராய்ச்சி. மனித உடலில் பல லட்சம் கோடி செல்கள் உள்ளன. இவற்றையோ, நுண்ணுயிர்களையோ மணம், நிறம், குணம் மாறாமல் அச்சு அசலாக ஜெராக்ஸ் பிரதி எடுப்பதுதான் ‘குளோனிங்’. இரு வரி விளக்கம் என்றாலும் இது மிகவும் சிக்கலானது. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் பல காலமாக நடந்து வந்தது. 1952-ல் முதன்முதலாக தவளை ஒன்று குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டது. 1963-ல் மீன், 1986-ல் சுண்டெலி.. என்று பட்டியல் நீண்டது. பெண் செம்மறி ஆட்டின் பால்மடியில் இருந்து செல்லை எடுத்து அதில் இன்னொரு பெண் ஆட்டின் முட்டையை சேர்த்து கருமுட்டையாக மாற்றி இதை வேறொரு செம்மறி ஆட்டின் கருப்பையில் வைத்து.. என 3 பெண் ஆடுகளின் குட்டியாக 1996-ல் ‘டாலி’ ஆடு பிறந்தது குளோனிங் ஆராய்ச்சியில் பெரும் மைல் கல் சாதனையாக இது கருதப்பட்டது. 

நாமாக உயிர்களை உருவாக்குவது இயற்கைக்கு எதிரான செயல் என ஒரு பக்கம் கண்டன குரல்கள் எழுந்தாலும் பூனை, குதிரை, நாய், ஓநாய், ஒட்டகம், ஆடு என பல்வேறு விலங்குகள் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டு வந்தன. மனித செல்லையும் குளோனிங் முறையில் உருவாக்குவதற்கான ஆராய்ச்சியும் தீவிரமாக நடந்து வந்தது. 15 ஆண்டு தீவிர முயற்சிக்கு பிறகு இதில் தற்போது வெற்றி கண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் ஆரிகன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஒரு ஆணின் தோல் செல்லை எடுத்து, அதனுடன் பெண்ணின் சினை முட்டையை சேர்த்து ஸ்டெம்செல் கருமுட்டையாக மாற்றியிருக்கிறார்கள். இது அச்சு அசலாக ஆண் தோல் செல்லின் ஜெராக்ஸ் போல அமைந்துள்ளது. இதுபற்றி ஆய்வுக்குழு உறுப்பினர் டாக்டர் சுக்ரத் மிடாலிபோவ் மேலும் கூறியதாவது: மனிதனின் தோல் செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதுபோல குளோனிங் முறையில் உருவாக்கப்படும் கருமுட்டையில் இருந்து ஸ்டெம்செல் உருவாக்கி அதன் மூலம் பல்வேறு வகையான திசு செல்களை உருவாக்க முடியும். உறுப்பு மாற்று ஆபரேஷன்களுக்கு இது முக்கிய பங்களிக்கும். உறுப்பு செல்களை வளர வைத்து, செயற்கை உறுப்புகள் தயாரிப்பது, தேவைப்படுவோருக்கு பொருத்துவதற்கான முயற்சிகளும் வெற்றி பெறும். 

குளோனிங் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் மனித ஸ்டெம்செல்லுக்கு வேறு செல்கள், திசுக்கள், உறுப்புகளை வளர வைக்கிற திறன் இருப்பது உறுதியாக தெரிகிறது. பார்வை கோளாறுகள், தண்டுவட பாதிப்புகள், பார்கின்சன்ஸ் டிசீஸ் எனப்படும் மூளை முடக்குவாதம், நரம்பு மண்டல பாதிப்புகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் செல்லை எடுத்து அதை கருமுட்டையாக மாற்றி வளர வைத்தால் செல்களின் ஜெராக்ஸ் பிரதிகளை உருவாக்க முடியும். பாதிக்கப்பட்ட செல்களை அகற்றிவிட்டு இந்த புதிய செல்களை பொருத்துவதன்மூலம் அவர்களை குணமாக்க முடியும். அதே நேரம், இந்த குளோனிங் ஸ்டெம் செல்லுக்கு இனப்பெருக்க குணம் இருக்கிறதா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. அதில் நாங்கள் ஆர்வமும் காட்டவில்லை. இவ்வாறு மிடாலிபோவ் கூறினார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலை ஸ்டெம்செல் துறை பேராசிரியர் மார்ட்டின் பெரா கூறுகையில், ‘‘ஆரிகன் விஞ்ஞானிகளின் அபார சாதனையானது மரபணு வளர்ச்சியில் மைல்கல் போன்றது. ஸ்டெம்செல்களின் மூலம் பலவித நோய்களை குணப்படுத்த முடியும் என்பது விரைவில் நிரூபிக்கப்படும். ஆரோக்கியமான மனிதகுலத்தை உருவாக்கி நாம் சாதனை படைப்பதால், ஸ்டெம்செல் மற்றும் குளோனிங் சம்பந்தமான எதிர்ப்புகள் தானே மறையும்’’ என்றார். மனித செல்லை குளோனிங் முறையில் உருவாக்கும் ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போதைக்கு இல்லாவிட்டாலும், மனிதனின் ஜெராக்ஸ் என்றாவது ஒருநாள் உருவாக்கப்படக்கூடும்.

No comments:

Post a Comment