CONTENTS:
பொதுவாக எல்லோருமே தெரியாமல்
சில தவறை செய்து விடுவார்கள். அதனை அவர்களே உணர்ந்து வருத்தப்படுவதும் உண்டு.
சில சமயம் அதிகம் அவதிப்படுவதும் உண்டு.
சில நேரத்தில் நாம் செய்யும்
தவறுகள், நமது வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே ஆட்டிவிடும் அளவுக்கு விளைவுகள்
நிறைந்ததாக இருக்கும்.
எனவே, சாதாரண
குடும்பத்தலைவர்கள், தலைவிகள் செய்யும் சில நிதித் துறை சார்ந்த விஷயங்களையும்,
செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.
அவசியமில்லாததை
எக்காரணத்துக்காகவும் வாங்காதீர்கள்
வங்கிகள் என்பவை, பணத்தை எந்த
வகையிலாவது பொதுமக்களுக்கு கடனாக அளித்துவிட்டு, அதனை வட்டியோடு சேர்த்து
பெற்றுக் கொள்ளும் ஸ்தாபனமாகும். எனவே, பல்வேறு வகையில் நம்மை திசை திருப்பி,
நம்மை கடன்காரர்களாக ஆக்கிவிடுவார்கள். எனவே, வீட்டுக்கு அவசியமில்லாத, தேவையே
இல்லாத பொருட்களை கடனில் பெற்று, அதற்கு வட்டிக் கட்ட வேண்டாம்.
இலவசம்
என்றாலும் கடன் அட்டைகளை தவிர்க்கலாம்
சில வங்கிகள், இலவசமாகவே கடன்
அட்டைகளை வழங்குகிறார்கள். அதாவது, அந்த கடன் அட்டையை நாம் வாங்குவதால், எந்த
விதமான சேவைக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று கூறி அதனை அளிக்கிறார்கள்.
இலவசம் என்று தானே நினைத்து, அதனை நாம் வாங்கி வைத்துக் கொண்டால், சில
சமயங்களில் அதனை பயன்படுத்தி சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே,
வங்கிகள் இலவசமாக எதைக் கொடுத்தாலும், இலவசம் தானே என்று உங்களுக்குத்
தேவையில்லாததை வாங்க வேண்டாம்.
முதலீடு
திட்டங்கள்
சிறு துளி பெரு வெள்ளம் என்று
சொல்வார்கள். எனவே, சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நமது
வருவாயில் முதல் செலவே சேமிப்பாக இருக்கட்டும் என்று சொல்வார்கள். ஒரு குறைந்த
தொகையையாவது சேமித்து வையுங்கள். இது நெருக்கடி நேரத்தில் உதவும். அதிகமாக
சேமிக்க இயலாதவர்கள், ஒரு சிறிய உண்டியலில் கூட குறைந்த தொகையை சேமித்து வரலாம்.
இது சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க உதவும்.
செலவுகளை
திட்டமிடுங்கள்
வருங்காலத்தில் ஏற்படும்
செலவுகளை திட்டமிட்டு, அதற்காக தனித்தனியே நிதி ஒதுக்கி வைத்து,
செலவிடுபவர்களுக்கு, தாங்க முடியாத நெருக்கடி என்று எப்போதுமே ஏற்படுவதில்லை.
எனவே, அடுத்த இரண்டு மாதத்துக்கு என்னென்ன தேவை, எதற்கெல்லாம் பணம் தேவைப்படலாம்
என்று திட்டமிட்டு, அதற்கான தொகையை இன்றே ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாளை
அந்த செலவு வராமல் போனால், அதனை சேமிப்பாகக் கூட மாற்றிக் கொள்ளலாம்.
குறிப்பாக, ஒரே மாதத்தில்
மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் என கட்ட வேண்டியது வரும். அப்போது, மின்சார
கட்டணம் செலுத்தாத மாதத்தில், ஒரு தொகையை அதற்காக ஒதுக்கி வைத்துக் கொண்டால்,
மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டிய மாதத்துக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல்
தவிர்க்கலாம்.
|
No comments:
Post a Comment