இந்திய பொறியியல் பணித் தேர்வு: விண்ணப்பிக்க ஏப்ரல் 21 கடைசி தேதி
மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்திய பொறியியல் பணித் தேர்வுக்கு (இ.எஸ்.இ.-2014) விண்ணப்பிக்க ஏப்ரல் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ். போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளைப் போல் இந்திய பொறியியல் பணித் தேர்வையும் யு.பி.எஸ்.சி. ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
2014-ஆம் ஆண்டுக்கான இ.எஸ்.இ. தேர்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடத்தப்பட உள்ளது.
சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ஜினீயரிங் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படும்.
இதில், தகுதி பெறுபவர்கள் இந்திய ரயில்வே, ராணுவம், கப்பற்படை, ராணுவ தளவாடங்கள் தயாரிப்புத் தொழிற்சாலை, நில அளவைத் துறை உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளில் உதவி செயற் பொறியாளர் பணி அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணியமர்த்தப்படுவர்.
இவ்வாறு பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.