ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் (மொத்தம் 150-க்கு 90 மதிப்பெண்) பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.
அதேசமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்குவதற்குப் பரிசீலிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியில் நியமிக்கும்போதுதான் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படுகிறது என்பதை தெரிவித்துள்ளார்.