Monday 3 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5% சலுகை

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் (மொத்தம் 150-க்கு 90 மதிப்பெண்) பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் நிர்ணயித்துள்ளது.
அதேசமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்குவதற்குப் பரிசீலிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியில் நியமிக்கும்போதுதான் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முழுமையாகப் பின்பற்றப்படுகிறது என்பதை தெரிவித்துள்ளார்.

பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.
அதாவது, மேற்கண்ட பிரிவினர் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55 சதவீத மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.
இந்தச் சலுகை ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித் தேர்வுக்கும் பொருந்தும்.
மத்திய அரசு அறிவித்துள்ளதை விட அதிகச் சலுகை:
தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் வெளியிடப்பட்ட கடிதத்தில், 2002-ஆம் ஆண்டுக்குப் பின் ஆசிரியர் பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மேல்நிலைத் தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணும், அதற்கு முன்னர் தேர்வு பெற்றவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருந்தால்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், அதாவது 35 சதவீதம் பெற்றுள்ளவர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு அறிவித்துள்ளதை விட அதிகச் சலுகை தமிழகத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் எவ்வளவு?
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150-க்கு 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுக்க வேண்டும். இதில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82.5 மதிப்பெண்ணாக குறைந்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என்பதால் அரை மதிப்பெண் கிடைக்காது. எனவே, சலுகைக்குப் பிறகு 82 அல்லது 83, இவற்றில் எது தேர்ச்சி மதிப்பெண் என தேர்வர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணிலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 82 மதிப்பெண் என்பது சலுகைக்குப் பிறகான தேர்ச்சி மதிப்பெண்ணாக சி.பி.எஸ்.இ. நிர்ணயித்துள்ளதாக தேர்வர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரியிடம் கேட்டபோது, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் சலுகை தொடர்பான அரசாணையில் இது குறித்து அறிவிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment