Follow by Email

Sunday, 14 July 2013

'Telegram Service - தந்தியடிக்கும் நினைவுகள்… விடைபெறுகிறது ‘தந்தி சேவை

160 ஆண்டுகள் புழக்கத்தில் இருந்
த தந்தி சேவை இன்றுடன் விடை பெறுகிறது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோவில் படம்பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதன் வரலாறு குறித்து பார்க்கலாம்.
இண்டர் நெட்டும் , செல்போன்களும் இல்லாத காலத்தில் கொடி கட்டி பறந்த தந்தி சேவை தற்போது படிப்படியாக குறைந்து விட்டது. நஷ்டத்தில் இயங்கும் இந்த தந்தி சேவை இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று தந்தி கொடுக்க வருபவர்களை வீடியோ மூலம் படம் எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தந்தி சேவை நிறுத்தப்பட உள்ளதால் இந்த துறையில் பணியாற்றியவர்கள் தொலை தொடர்பு நிர்வாகத்தின் பல்வேறு பிரிவுகளில் மறு பணி நியமனம் செய்யப்பட இருப்பதாக தொலைத்தொடர்பு துறையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி சேவையின் வரலாறு
அமெரிக்காவின் சாமுவேல் மோர்ஸ் கடந்த 1837ம் ஆண்டு தந்தி முறையை கண்டறிந்தார். அதே கால கட்டத்தில் இங்கிலந்தின் குகி மற்றும் வீட்ஸ்டோன் ஆகியோரும் இதே முறையை உருவாக்கி, காப்புரிமை பெற்றனர். 1845ம் ஆண்டு இங்கிலந்தில் தந்தி சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 1850ம் ஆண்டில் கொல்கத்தாவுக்கும் அதன் புறநகர் பகுதியில் உள்ள டைமண்ட் துறைமுகத்திற்கும் இடையே பரீட்சார்த்த முறையில் தந்தி சேவை தொடங்கப்பட்டது.
பின்னர் 1853ல் கொல்கத்தா, ஆக்ரா, மும்பை, சென்னை, ஊட்டி, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையே 6,400 கிலோ மீட்டர் தூரத்திற்கு தந்தி சேவைக்கான தொலைத்தொடர்புக் கம்பிகள் நிறுவப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டே, தந்தி சேவைக்கான தனித்துறை இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1870ல், இங்கிலந்துடன், கம்பி வடங்கள் மூலமாக இந்தியாவின் தந்தி சேவை இணைக்கப்பட்டது. 1882ம் ஆண்டு தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
1980களில் நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் தந்திகள் அனுப்பப்பட்டன. பின்னர் 1991-92ம் ஆண்டுகளில் மட்டும் அதிகபட்சமாக ஆறரை கோடி தந்திகள் அனுப்பப்பட்டன. இந்த எண்ணிக்கை 1995-96ல் ஐந்து புள்ளி ஆறு கோடியாகவும், 2000 முதல் 2001ம் ஆண்டுகளில் மூன்றரை கோடியாகவும் சரிந்தது.
குறைந்த கட்டண தொலைபேசி சேவை மற்றும் இணையதள சேவை ஆகியவற்றின் அறிமுகம் காரணமாக முக்கியத்துவத்தை இழந்த தந்தி சேவை, காலத்தின் சுழற்சியில் இன்று முற்றிலுமாக மறைந்து போகும் நிலைக்கு வந்துள்ளது.
தந்தியடிக்கும் நினைவுகள்
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாம் வளர்ந்து வந்த விதங்களை மறக்க செய்து விடுகிறது.எடுத்துக்காட்டாக வீடியோ கேம்களின் ஆதிக்கம் மண்ணில் விளையாடும் விளையாட்டுகளை மறக்க செய்துவிட்டது. இப்படி நாம் தொடர்ந்து பாரம்பரியங்களை இழந்து வருகிறோம். அப்படி ஒன்றைத்தான் இன்றோடு நாம் இழக்க இருக்கிறோம்.
தந்தி என்ற சொல்லை நாம் சாலையில் சந்தித்த சில மனிதர்களிடம் கூறினோம். சிலர் துக்க செய்திகளை தாங்கி வந்த தருணங்களை நினைவுக் கூர்ந்தனர். சிலர் இன்று தாங்கள் செய்துக்கொண்டிருக்கும் பணி நியமனத்திற்கான ஆணை அதன் வழியாக தங்களது வாசல் கதவுகளை தட்டியதை பகிர்ந்து கொண்டனர். இதுமட்டுமல்ல வாழ்த்துக்களையும் தாங்கி சென்று ஏராளமானோரை பரவசமடையச் செய்திருக்கின்றன இந்த தந்திகள்.
"இனி அருங்காட்சியகத்தில் மட்டுமே"
ஆனால், தந்தி என்று ஒன்று இருந்ததா என நாளைய தலைமுறையினர் கேள்வி எழுப்பும் நாள் வெகுதூரத்தில் இல்லை. இனி கடைசியாக அனுப்பபட்ட தந்தியை அருங்காட்சியகத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்...இதற்கெல்லாம் காரணம் வரும் 15 ஆம் தேதி முதல் தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் முடிவு செய்திருப்பதுதான்.
விடைக் கொடுக்க மனமில்லை
தந்திக்கு விடை கொடுக்க மனமில்லாத திருச்சி நுகர்வோர் மற்றும் சேவைகள் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் சேகரன், தந்தி சேவையை நிறுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஒரு சரித்திர முடிவு
இது குறித்து பதில் அளிக்குமாறு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். 160 ஆண்டு கால சரித்திர முடிவிற்கு காரணம் இ போஸ்ட் எனப்படும் மிண்ணனு தந்தி சேவை தொடங்கப்பட உள்ளதே. இ மெயில் போல கணிணி மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்ள இ போஸ்ட் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிராமப்புற மக்களுக்கு தகவல் அனுப்ப, பலராலும் பயன்படுத்தப்பட்ட தந்தி சேவை, அறிவியல் வளர்ச்சி மற்றும் கால சுழற்சியால் இன்றோடு முடிவுக்கு வருகிறது. எதிர்கால சந்ததியினர், தந்தி சேவை என்ற ஒன்றை, புத்தகங்களில் படித்து மட்டுமே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகியுள்ளது

Google+ Followers