Friday 5 April 2013

மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு 2013


தமிழக மீனவர்களுக்கு அதிக அலைவரிசை கொண்ட தகவல் தொடர்பு கருவி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார் தமிழக முதல்வர். இதற்கிடையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள், மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி தமிழக மீனவர்களுக்கு பேருதவியாக அமையும் என்கின்றனர் இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்கள்.
கடல் எல்லை குறித்த சிக்கல் காரணமாக, தமிழக மீனவர்கள் உயிரிழப்பு,
பொருளிழப்பு என பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர். நீண்ட நெடுங்காலமாக தீராமல் இருக்கும் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த புதிய கருவியொன்றை கண்டுபிடித்திருக்கின்றனர், சிவகாசியில் உள்ள PSR பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள். மீனவர்கள் இந்திய கடல் எல்லை முடிவடையும் பகுதியை நெருங்கும்போது ஒலிபெருக்கிகள் மூலமாக எச்சரிக்கை செய்யும் கருவியை வடிவமைத்திருக்கின்றனர் இவர்கள். இந்த கருவி மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடித்து திரும்பலாம் என்கின்றனர் இதை உருவாக்கியுள்ள மாணவர்கள்.
எச்சரிக்கை செய்வதோடு மட்டுமன்றி, தொடர்ந்து படகை சில நிமிடங்களுக்கு செலுத்த முடியாமல் நிறுத்தி வைக்கும் அமைப்பும் இந்த கருவியில் உள்ளது. பயனுள்ள இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்த, மாணவர்களை தொடர்ந்து ஊக்குவித்ததாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் கூறுகின்றனர். தாங்களே அறியாமல் கடல் எல்லையைத் தாண்டிச் சென்று துன்பப்படும் மீனவர்களின் பிரச்னைக்கு, இந்த கண்டுபிடிப்பு மிகச் சிறந்த தீர்வாக அமையும் என்று நம்புவதாக தெரிவிக்கின்றனர் கல்லூரி நிர்வாகத்தினர்.
படித்துக் கொண்டிருக்கும் போதே சமூக நோக்கத்தோடு இத்தகைய கண்டுபிடிப்பை மாணவர்கள் நிகழ்த்திருப்பது மிகுந்த பாராட்டுகளுக்கு உரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அனைத்து நாட்டு மீனவர்களுக்கும் பயன்படக்கூடிய இந்தக் கண்டுபிடிப்பு சோதனை அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதனை செயல் வடிவில் மாற்ற அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் மாணவர்கள்.

No comments:

Post a Comment