Wednesday 7 August 2013

இந்தியாவில் 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன அறிவியலாளர்கள் நடத்திய ஆய்வில், சுமார் 133 உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவன இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவிக்கும் போது, கடந்த ஓராண்டில் மட்டும் 16 பிரிவுகளில், அதாவது, ஒரு செல்  உயிரினம் முதல், மீன், நண்டு, பறவை உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து 133 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக, அபூர்வமான, பறக்காத பறவை இனம் ஒன்று அந்தமான் தீவுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், 66 பூச்சி இனங்களும், 4 சிலந்தி இனங்களும், 2 நண்டு இனங்களும், 19 மீன் இனங்களும், 2 நீர்வாழ் இனங்களும், 2 ஊர்வன இனங்களும், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனோடு, ஒரு செல் உயிரிகள், உண்ணிகள், என நுண்ணுயிரிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக வெங்கட்ராமன் தெரிவித்தார்.
இதேப்போன்று, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு, சுமார் 109 விலங்கினங்களும், 42 பவள இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை பல்வேறு நாடுகளில்  இருப்பதாக அறியப்பட்டாலும், நம் நாட்டிலேயே அவற்றை கண்டுப்பிடித்திருப்பதாக வெங்கட்ராமன் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் வடகிழக்கு பகுதி பல்லுயிர்ப்பெருக்கம் நிறைந்த பகுதியாக விளங்குவதாகவும். இன்னும் கண்டுப்பிடிக்க வேண்டிய உயிரினங்கள் நிறைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஏற்பட்ட உத்தரகண்ட் இயற்கை சீற்றத்தால் ஏராளமான உயிரினங்கள் அறியப்படாமலேயே நிரந்தரமாக அழிந்திருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் வெங்கட்ராமன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment