Monday 24 November 2014

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தினமும் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னையில் பல்லவன் இல்லச் சாலையில் அமைந்துள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தில் கடந்த ஒரு வார காலமாக விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக இருக்கும் 776 சேம ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 260 பணியிடங்களும், திருச்சி மண்டலத்தில் 256 பணியிடங்களும், நாகர்கோவில் மண்டலத்தில் 260 பணியிடங்களும் காலியாக உள்ளன.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் 746 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 610 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதுபோல, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தில் 899 சேம ஓட்டுநர், 702 சேம நடத்துநர் பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 259 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 409 சேம நடத்துநர் பணியிடங்களும், கும்பகோணம் மண்டலத்தில் 181 சேம ஓட்டுநர், 37 சேம நடத்துநர் பணியிடங்களும், விழுப்புரம் மண்டலத்தில் 256 சேம ஓட்டுநர், 295 சேம நடத்துநர் பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 280 சேம ஓட்டுநர், 278 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதுதவிர, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த 3-ஆம் தேதி வெளியிட்டு அடுத்த நாள் முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கியது.
விண்ணப்பங்களை நவம்பர் 20-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அந்தந்த மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஏராளமானோர் ஆர்வத்துடன் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பித்து வருவதாகப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment