Tuesday 16 December 2014

வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் வெளியீடு 2014

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.
 மேலும், தேர்வு எழுதியவர்களில் 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண்களும், தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
 இதுகுறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா வெளியிட்டார்.
 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் காலியாகவுள்ள 2 ஆயிரத்து 342 பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 14-ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
தேர்வை 7 லட்சம் பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
 தேர்வு எழுதியவர்களில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்த 6 லட்சத்து 71 ஆயிரத்து 506 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவை தேர்வாணைய
இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்
பொது தரவரிசைப் பட்டியலும், வகுப்பு வாரியான தரவரிசைப் பட்டியலும், சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசைப் பட்டியலும்
வெளியிடப்பட்டுள்ளது.  விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை இணையதளத்தில் பதிந்து
தெரிந்து கொள்ளலாம்.
 விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வி, தொழில்நுட்ப தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின்
அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு
அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா தெரிவித்துள்ளார்.
 விண்ணப்பதாரர்கள் அவர்களின் தரவரிசை நிலை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.
கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment